சாத்தான்குளத்தில் பெண் அடித்துக்கொலை- கணவர் கைது

மகள் பிரச்சினையில் பெண்ணை அடித்துக்கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளத்தில் பெண் அடித்துக்கொலை- கணவர் கைது
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் உதயாநகரை சேர்ந்தவர் ஜான்கென்னடி. கூலி தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா செல்வி(வயது 51). இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். ஜான்கென்னடிக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு ஜான்கென்னடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜான்கென்னடி அருகில் கிடந்த கம்பால் மல்லிகா செல்வியை சரமாரி தாக்கியுள்ளார். அப்போது இவர்களது மகன் ஜான்வாசிங்டன் தடுத்துள்ளார். அவரையும் ஜான் கென்னடி தாக்கியுள்ளார்.

இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மல்லிகா செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மல்லிகா செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜான் கென்னடியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜான் கென்னடியின் மகள் சோனியா என்பவரை சங்கரன்குடியிருப்பில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அங்கு கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோனியா கணவருடன் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இது ஜான் கென்னடிக்கு பிடிக்கவில்லை. சோனியாவை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மனைவியுடன் கூறி வந்துள்ளார். இதே போல் நேற்று இரவும் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கம்பால் தாக்கி மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com