சங்கரன்கோவிலில் நடத்தை சந்தேகத்தில் பெண் படுகொலை - கணவர் வெறிச்செயல்

சங்கரன்கோவில் அருகே நடத்தையில் சந்தேகத்தில் மனைவியை கணவர் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட பாப்பா -  கைதான வீராசாமி.
கொலை செய்யப்பட்ட பாப்பா - கைதான வீராசாமி.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காமராஜர் நகரை சேர்ந்தவர் வீராசாமி(வயது 50). இவர் கேரளாவில் கூலிவேலை செய்து வந்தார். இவரது மனைவி பாப்பா(47). இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

வீராசாமி அடிக்கடி கேரளா சென்று வந்ததால் மனைவி பாப்பா நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். நேற்று அவர் கேரளாவில் இருந்து சங்கரன்கோவிலில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் நடத்தை சந்தேகம் தொடர்பாக அவர்களுக்குள் நீண்டநேரம் சண்டை நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் நள்ளிரவில் தான் தூங்க சென்றுள்ளனர். வீராசாமி தூக்கம் வராமல் நீண்டநேரம் விழித்து இருந்துள்ளார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் படுக்கையில் இருந்து எழுந்த வீராசாமி, கத்தியை எடுத்துக்கொண்டு மனைவி பாப்பா படுத்திருந்த இடத்துக்கு சென்றார். அங்கு தூங்கி கொண்டிருந்த பாப்பா கழுத்தில் கத்தியால் குத்தினார். இதில் பாப்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

அதன்பின்னர் வீராசாமி ரத்தக்கறையுடன் நேராக சங்கரன்கோவில் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பாப்பாவை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

அதன்பிறகுதான் அங்கு கொலை நடந்திருப்பது அனைவருக்கும் தெரிந்தது. உடனடியாக அங்கு கொலை செய்யப்பட்ட பாப்பாவின் உறவினர்கள் கதறி அழுதனர். போலீசில் சரண் அடைந்த வீராசாமியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வீராசாமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com