சேலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சேலம் அருகே குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Published on

சேலம்:

சேலம் இரும்பாலை அருகே ஓலைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு பாப்பன் வாடி ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் விநியோகிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் பலமுறை ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இரும்பாலை மெயின்கேட் அருகே திரண்டனர். பின்னர் அங்குள்ள சேலம்- தாரமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது குடிநீர் வழங்கக்கோரி கண்டன கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அந்த சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com