

சேலம்:
சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவர், அதே பகுதியில் 4-வது கிராஸில் 2 மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் பட்டு தயாரிக்க கூடிய விலை உயர்ந்த நார்பட்டு நூல் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இதில் கீழ் தளத்தில் அலுவலகமும், மேல் தளத்தில் நூல் குடோனுமாக அமைத்திருந்தார்.
நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் இந்த குடோனில் இருந்து கரும்புகை மளமளவென வெளியேறியது. கட்டிடம் வெளியே நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு இருந்த காவலாளி இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர், உரிமையாளர் விஜயகுமாருக்கு போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
உடனே, விஜயகுமார், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் சிராஜி அல்வானிக் தலைமையில் 20 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. அங்கிருந்த விலை உயர்ந்த நார் பட்டுகள் கொளுந்துவிட்டு தீயில் எரிந்து கொண்டிருந்தன. இதனால் முதலில் தீயணைப்பு வீரர்கள், குடோனுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர்.
குடோன் அருகில் ஏராளமான வீடுகள் இருந்ததால் வீரர்கள், தீ வெளியே பரவாமல் இருக்க கட்டிடத்தை சுற்றி நின்று, வாகனத்தில் கொண்டு வந்த தண்ணீரை 3 பக்கமும் பீய்ச்சி அடித்தனர். வாகனத்தில் இருந்த தண்ணீர் தீரவே, மற்றொரு வாகனத்தை அங்கு வரவழைத்தனர். இந்த தண்ணீரும் காலியாகவே, ஓமலூரில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் அங்கு வரவழைக்கப்பட்டது.
அங்கு காற்று தொடர்ந்து அதிகமாக வீசவே தீயை அணைப்பதற்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் கட்டிடத்திற்குள் செல்ல வழியில்லாததால் கதவின் பூட்டை உடைத்து வீரர்கள் ஒவ்வொரு பேராக உள்ளே சென்று குழாய் மூலம் தண்ணீரை கட்டிட சுவரில் பீய்ச்சி அடித்தனர். அங்கு மூட்டையில் கட்டி வைத்திருந்த நார் பட்டு நூல்கள் மற்றும் நார்பட்டு பண்டல்கள், மின்வயர்கள், சாக்கு மூட்டைகள், தீயில் வேகமாக எரிந்து கொண்டிருந்தன. அவற்றை அணைத்தனர். மறுபுறம் 5 -க்கும் மேற்பட்ட வீரர்கள் கட்டிடத்தின் 3 -வது மாடியில் ஏறி மொட்டை தளத்தில் நின்று தண்ணீரை ஜன்னல் வழியாக செலுத்தினர்.
இதற்கிடையே இந்த தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் என்.விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, பணியை மேலும் துரிதப்படுத்தினார்.அதிகாலை 2.35 மணி முதல் தொடர்ந்து வீரர்கள் இடைவிடாமல் போராடினர்.
3 வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீர் முழுவதும் பீய்ச்சி அடித்த பிறகு தான் தீ கட்டுக்குள் வந்தது. சுமார் 5 மணி நேரம் வீரர்கள் போராடி காலை 7.30 மணி அளவில் தீ முழுவதையும் அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து வீரர்கள் ஆய்வு செய்தபோது, மின்கசிவினால் தீ விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது. இதில் பாதிக்கும் மேற்பட்ட நார் பட்டு நூல்கள் தீயில் எரிந்து சேதமாகின. இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் பல மணி நேரம் பீதியை ஏற்படுத்தியது. தீயை அணைத்த பிறகே அவர்கள் நிம்மதி பெரு மூச்சி விட்டனர்.