சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் கருவறை இடித்து அகற்றம்: பக்தர்கள் எதிர்ப்பு

சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் கருவறை இடித்து அகற்றப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கோட்டை மாரியம்மன் கோவில் கருவறை இடிக்கப்படும் காட்சியையும், கருவறை தரைமட்டமாக்கப்பட்டதையும் படத்தில் காணலாம்.
கோட்டை மாரியம்மன் கோவில் கருவறை இடிக்கப்படும் காட்சியையும், கருவறை தரைமட்டமாக்கப்பட்டதையும் படத்தில் காணலாம்.
Published on

சேலத்தில் பிரசித்தி பெற்றது கோட்டை மாரியம்மன் கோவில். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை புதுப்பித்து கட்டுவதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுற்று பிரகாரம் இடித்து அகற்றப்பட்டது.

அப்போது முதலே மிகவும் பழமையான கோவில் கருவறையை இடிக்க கூடாது என்று பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் கருவறையை அகற்றி விட்டு புதிதாக கட்ட அறநிலைய துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பக்தர்கள் முறையிட்டதால் கருவறையை இடித்து அகற்றுவது தாமதமாகி வந்தது.

இதற்கிடையே கோட்டை மாரியம்மனுக்கு பாலாலயம் செய்து விட்டதால் இன்று அதிகாலை கருவறையை இடித்து அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக கோவில் அறநிலையத்துறை அதிகாரி மாலா தலைமையில் அதிகாரிகளும், கட்டுமான தொழிலாளர்களும் நேற்றிரவு கோவிலுக்குள் தயாராக இருந்தனர். கருவறையை சுற்றி மெர்குரி விளக்குகளும் கட்டப்பட்டது.

கோவிலின் 4 நுழைவு வாயில்களும் இழுத்து மூடப்பட்டன. தெற்கு சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் அன்பு தலைமையில் கூடுதல் போலீசார் கோவில் சுற்றுப்புரத்தில் குவிக்கப்பட்டனர். இதையறிந்த ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு திரண்டனர். பின்னர் போலீஸ் உதவி கமி‌ஷனர் அன்புவிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கோட்டை மாரியம்மன் கோவில் கருவறை பழமையும், தொன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் கருவறையை இடிக்க கூடாது என்று கூறி இருந்தனர்.

அம்மன் சிலை அகற்றப்பட்ட காட்சி.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவில் கருவறையை இடித்து அகற்றுவதற்காக அம்மன் கருவறையில் சிறப்பு யாகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் ஆகம விதிப்படி மாரியம்மன் சிலை அகற்றப்பட்டு நெற்குவியலில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து கருவறை சிறிது சிறிதாக ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதனை அறிந்த பக்தர்கள் கோவிலை சுற்றி நின்று அதிகாரிகளுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய படியே இருந்தனர். அவர்களை போலீசார் பல முறை எச்சரித்தும் அந்த பகுதியிலேயே சுற்றி வந்தனர்.

மேலும் கோவிலுக்குள் நுழைந்தால் கைது செய்வோம் என்றும் போலீசார் கூறியதால் சிலர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த பெண் வக்கீல் பிரவீணா (45) என்பவர் கோவிலின் வெளிப்பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு கூடுதல் பரபரப்பு நிலவியது.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கூறுகையில், பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கருவறை இடிக்கப்பட்டுள்ளதால் மன வேதனை ஏற்பட்டுள்ளது. இது போல வேறு இடங்களில் கோவில் கருவறைகளை இடிக்க கூடாது.

கருவறையை இடிக்க கூடாது என்று கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. கோவில் கருவறை தொடர்பான வழக்கை கோர்ட்டில் சந்தித்து கொள்கிறோம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள் என்றனர்.

இது குறித்து கோவில் செயல் அதிகாரி மாலா கூறியதாவது:- இந்து அறநிலையத்துறை கமிட்டி நடவடிக்கையின் பேரில் கோட்டை மாரியம்மன் கருவறை இன்று அதிகாலை இடித்து அகற்றப்பட்டுள்ளது. கருவறை கட்டுமான பணிகள் உடனே தொடங்கப்படும். கருவறை முழுவதும் கருங்கல்லால் கட்டடப்பட உள்ளது. ஓராண்டுக்குள் பணிகள் அனைத்தையும் முடிக்கும் வகையில் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com