

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஊழலுக்கு எதிராக நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வருகிறார். லஞ்ச ஊழலுக்கு எதிரான இவரது நடவடிக்கை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று ‘மாறுவோம், மாற்றுவோம்’ என்ற தலைப்பில் நடந்த விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
ஊழலை எதிர்க்க அரசியலில் குதிப்பேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நான் பணிபுரிந்து வந்தாலும் தொடர்ந்து ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். அப்போதே நான் அரசியலுக்கு வந்து விட்டதாகவே அர்த்தம்தான்.
அதே நேரத்தில் தேர்தல் அரசியல் என்பது வேறு. அதுபற்றி இந்த சமூகம் முடிவெடுக்கும்போது எனது முடிவிலும் தாக்கம் ஏற்படலாம்.
லஞ்சமும் ஊழலும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானதாகும். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு அது பெரிய தடையாக உள்ளது. எனவேதான் தேர்தல் அரசியலை தாண்டி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
அரசியல் கட்சிகளோடு நான் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியம் இல்லை. எனது அதிகார வரம்புக்குட்பட்ட அலுவலகங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
உடனடியாக தேர்தல் அரசியலுக்கு வருவது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. இளைஞர்களும், மாணவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.