

சென்னை:
மத்திய அரசு கடந்தாண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதில் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வித்தியாசமான வடிவமைப்புடன் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
ஆயிரம் ரூபாய் நோட்டு விலக்கப்பட்டதால் நாடெங்கும் பணப்புழக்கத்தில் இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. மேலும் நோட்டுகளை குறைந்த மதிப்பில் மாற்றுவதில் சங்கடங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து புதிதாக 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த ஜூன் மாதம் 200 ரூபாய் நோட்டை அச்சிட அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
புதிய 200 ரூபாய் நோட்டுகள் இந்த மாத இறுதியில் நாடெங்கும் புழக்கத்தில் விடப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் அச்சிடும் பணியில் ஏற்படும் தாமதம் காரணமாக இந்த மாத இறுதியில் 200 ரூபாய் நோட்டுகள் வெளிவர வாய்ப்பில்லை.
தீபாவளி சமயத்தில் அந்த புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நோட்டுகள் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கிறது. இதில் நவீன பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
புதிய 200 ரூபாய் நோட்டுகள் மிக சிறிய வடிவமைப்புடன் வர உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளையும் விட சிறியதாக இருக்கும்.
எனவே புதிய 200 ரூபாய் நோட்டுகள் உடனடியாக ஏ.டி.எம். எந்திரங்களில் கிடைக்காது. ஏ.டி.எம். எந்திரங்களில் புதிய ரூபாய்க்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகே 200 ரூபாய் நோட்டுகளை பெற முடியும். அதற்கு சில மாதங்கள் ஆகலாம்.