

திருச்சி:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது அத்தாளநல்லூர். இங்கு சுமார் 1500 ஆண்டுகள் பழமையான மூன்றீஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான கற்சிலைகள் உள்ளன. இக்கோவில் கருவறையின் வெளியே இருபுறமும் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 2 துவார பாலகர்கள் சிலை கடந்த 1995-ம் ஆண்டு திருட்டு போனது.
இது குறித்து வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிவில் இந்த வழக்கை கண்டுபிடிக்க முடியாத வழக்கு என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வீரவநல்லூர் கோவில் சிலைகள் கடத்தல் வழக்கு குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மூன்றீஸ்வரமுடையார் கோவில் துவார பாலகர் கற்சிலைகள் நெல்லையில் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டதும், அந்த சிலைகளை திருடி கடத்த இந்தோ - நேபாளம் ஆர்ட் கேலரியின் உரிமையாளர்களான வல்லப பிரகாஷ், சூர்யபிரகாஷ் ஆகியோருக்கு சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரால் ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இச்சிலைகளை காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி நரசிம்மன், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஊமைத்துரை, அவரது தம்பி அண்ணாத்துரை, மும்பையை சேர்ந்த வல்லப பிரகாஷ், அவரது மகன் ஆதித்ய பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து திருடிய குற்றத்திற்காக ஏற்கனவே சிலை திருட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் செயல்பட்டது தெரியவரவே, திருச்சி சிறையில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருடப்பட்ட சிலைகள் ஆஸ்திரேலியாவில் கேன்பெர்ரா நகரில் உள்ள நேஷனல் கேலரி ஆப் ஆஸ்திரேலியா அரசு கண் காட்சியகத்தில் உள்ளது என்றும், அந்த சிலைகள் ரூ.4.98 கோடிக்கு விற்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
துவாரபாலகர் சிலைகளை கோவிலில் இருந்து உடைத்து பெயர்த்து எடுத்து திருடி மதுரைக்கு கொண்டு சென்றும், மதுரையில் இருந்து சென்னைக்கு சிலைகளை கடத்தியும் லட்சுமி நரசிம்மனிடம் ரூ.3 லட்சத்திற்கு கொடுத்துள்ளனர்.
கற்சிலைகளை திருடி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் மன்னனான தஞ்சாவூர் சீத்தாராமையா, திருவனந்தபுரத்தை சேர்ந்த சஞ்சீவி அசோகன் ஆகியோர் சிலைகளை மும்பைக்கு அனுப்பி உள்ளனர். 2007-ம் ஆண்டு சீத்தாராமையா இறந்து விட, மும்பையில் இந்தோனேசியா ஆர்ட் சென்டரில் மேற்படி சிலைகளை உடைந்த கைவினை பொருள் என சான்று வாங்கி, கடல் மார்க்கமாக லண்டனுக்கு கொண்டு சென்று பழுதினை நிவர்த்தி செய்துள்ளனர்.
இந்த வேலைப்பாடு மிக்க தொன்மையான கற்சிலைகள், இன்றும் காட்சி பொருளாக நேஷனல் கேலரி ஆப் ஆஸ்திரேலியாவில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சஞ்சீவி அசோகனை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணையில் சிலை கடத்தல் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. #tamilnews