

பாட்னா:
பீகார் மாநிலம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர்களில் ஒருவரும் லல்லு பிரசாத்தின் நெருங்கிய நண்பருமான கேதர் ராய் பாட்னாவில் வசித்து வருகிறார். அவர் இன்று காலை தனாபூர் பகுதியில் உள்ள சுக்னா சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கேதர் ராயை நோக்கி சரமாரியாக சுட்டனர். உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்த நிலையில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை நில பிரச்சனையால் ஏற்பட்டிருக்கலாம் என கருதும் போலீசார், கொலைக்கு காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் மேற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.