ஒரு மாதமாக கிணற்றில் தவித்த நாய்க்குட்டி உயிருடன் மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு மாதமாக கிணற்றில் தவித்த நாய்க்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட நாய்க்குட்டி
மீட்கப்பட்ட நாய்க்குட்டி
Published on

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள காந்திநகர் விஸ்தரிப்பு பகுதியின் கடைசியில் தண்ணீர் இல்லாத சுமார் 30 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெருவில் சுற்றித்திரிந்த நாய்க்குட்டி ஒன்று தவறி விழுந்துள்ளது. கிணற்றில் விழுந்த நாளில் இருந்து அந்த நாய்க்குட்டி கத்திக் கொண்டே இருந்தது. குட்டி என்பதாலும், 30 அடி ஆழ கிணறு என்பதாலும் அதன் சத்தம் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை.

கிணற்றின் அருகே வசிக்கும் டெய்லர் செல்வராஜ் எதேச்சையாக கிணற்று பக்கம் சென்றார். அப்போது நாய்க்குட்டி ஒன்று கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வாளியில் கயிறு கட்டி அதனை மீட்க முயன்றார். நீண்டநேரம் போராடியும் அந்த நாய்க்குட்டியை மீட்க முடியவில்லை.

இப்படியே விட்டால் அந்த நாய்க்குட்டி இறந்து விடும் என்று கருதிய அவர், வாளி மூலமாக அதற்கு தினமும் உணவு மற்றும் தண்ணீர் அனுப்பி வந்தார். இப்படியாக ஒரு மாதம் உருண்டோடியது. இந்நிலையில் நேற்று மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி அந்த நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர். உயிர் பிழைத்த சந்தோஷத்தில் அந்த நாய்க்குட்டி துள்ளிக்குதித்து ஓடியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com