

கரூர்:
இந்திய திருநாட்டின் 69-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா தான்தோன்றிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் வரவேற்று அழைத்து வந்தார்.
இதையடுத்து அங்கிருந்த கொடி மரத்தில் காலை 8 மணிக்கு தேசியக்கொடியை கலெக்டர் கோவிந்தராஜ் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண் டார். சமாதானத்தின் அடையாளமாக அவர் வெண் புறாக்களை பறக்க விட்டார்.
பின்னர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். மேலும் அரசுத்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கெளரவித்தார்.
விழாவில் பல்வேறு அரசுத்துறை சார்பில் 113 பேருக்கு ரூ.3 கோடியே 18 லட்சத்து 69 ஆயிரத்து 303 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அதிகாரி கவிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், உதவி கலெக் டர் சரவணமூர்த்தி, மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். #Tamilnews