

புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சந்திரா கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார்.
இவருக்கு பிறகு பல்கலைக்கழகத்தின் சீனியர் டீன் அனிஷா பஷீர்கான் பொறுப்பு துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். அனிஷா பஷீர்கானின் டீன் பதவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி முடிவடைந்தது.
அப்போது அவர் துணைவேந்தர் பதவியில் நீடிக்கலாமா? என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து அப்போதைய பதிவாளர் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டார்.
இதன் தொடர்ச்சியாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் அனிஷா பஷீர்கான் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தன்னை நீக்க உத்தரவிட்ட பதிவாளரை அதற்கு முந்தைய தினமே பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக துணைவேந்தர் அலுவலகத்தில் ஆவணம் தயார் செய்யப்பட்டது.
இந்த ஆவணம் தொடர்பாக பல்கலைக்கழக முன்னாள் சட்ட அதிகாரி பால சுப்ரமணியன் புதுவை போலீசில் புகார் செய்தார். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் சென்னை ஐகோர்ட்டில் பாலசுப்ரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்த ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி உத்தரவிட்டது.
இதனையடுத்து காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பாலசுப்ரமணியன் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் அனிஷா பஷீர்கான், அப்போதைய பதிவாளர் ராமசந்திரன், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வீரப்பன், துணைவேந்தரின் தனி செயலாளர் ராம்குமார் ஆகியோர் மீது 420 மோசடி உள்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்பில் உள்ள அனிஷா பஷீர்கான் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த தகவல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பேரில் அனிஷா பஷீர்கான் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.