ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் திறப்பு குறைப்பு

ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு கால்வாய் மூலம் வரும் கிருஷ்ணாநீர் திறக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் திறப்பு குறைப்பு
Published on

ஊத்துக்கோட்டை:

சென்னை மக்களின் குடிநீர் தேவை பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடவேண்டும்.

அதன்படி டிசம்பர் மாதம் 27-ந்தேதி கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த ஜனவரி 2-ந்தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. முதலில் கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர். பின்னர் 2,450 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

பூண்டி ஏரிக்கு முதலில் 20 கன அடிவீதம் வந்த தண்ணீர் பின்னர் படிப்படியாக அதிகரித்தது. அதிகபடியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்தது.

கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2,450 அடிவீதம் தண்ணீர் திறந்தும் பூண்டி ஏரிக்கு சராசரியாக 400 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து சேர்ந்தது.

இந்நிலையில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 2,250 கனஅடியிலிருந்து 2,050 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதற்கிடையே சத்தியவேடு பகுதியிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரை குப்பம் ஜீரோ பாயின்ட் பகுதி வரை ஆந்திராவில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் டீசல் மோட்டார்கள் அமைத்து தண்ணீர் திருடுவதால் தண்ணீர் வரத்து மேலும் குறைந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, கும்மிடிபூண்டி தாசில்தார் ராஜகோபால், பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் அரசு, உதவி பொறியாளர்கள் ரவிசந்திரன், சதீஷ் ஆகியோரின் தலைமையில் அதிகாரிகள் ஆந்திராவில் உள்ள சத்தியவேடு பகுதி மற்றும் தமிழக எல்லையில் உள்ள பூதூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு செய்தனர்.

அப்போது விவசாயிகள் தண்ணீர் திருட பயன்படுத்திய டீசல் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். இதற்கு விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றவே இத்தகைய நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

தமிழக எல்லையில் மட்டும் 53 மோட்டார்களை பறிமுதல் செய்தனர். சில விவசாயிகள் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு பயந்து டிசல் மோட்டார்களை கழுட்டி கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தமிழக அதிகாரிகளின் இந்த நடவடிக்கை காரணமாக கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை ஜீரோ பாயின்டிற்கு வினாடிக்கு 553 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஜனவரி 2 முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையிலிருந்து 1. 563 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com