சேஷாசலம் வனப்பகுதியில் வெட்டப்பட்ட ஆயிரம் டன் செம்மரங்களை விற்பனை செய்த கடத்தல் மன்னன்

சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் பெனுமூர் அருகே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து காருடன், செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான நசீர்
கைதான நசீர்
Published on

திருப்பதி:

சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரபாபு உத்தரவின்பேரில், பெனுமூர் அருகே நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால், அந்தக் கார் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் ஒரு வாகனத்தில் விரட்டிச்சென்று, காரை மடக்கினர்.

காரில் சோதனைச் செய்தபோது, அதில் நான்கு துண்டு செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டு காரில் வந்த பெங்களூருவைச் சேர்ந்த நசீர் (வயது 45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் 2014-ம் ஆண்டில் இருந்து சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புக்கொண்டார்.

சித்தூர் மாவட்டத்தில் இதுவரை அவர் மீது செம்மரக்கடத்தல் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. போலீசாரிடம் சிக்காமல் சாமர்த்தியமாக ஆயிரம் டன் செம்மரக்கட்டைகளை திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்தி வியாபாரம் செய்ததாக கூறினார்.

இவருக்கு சென்னை, சேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த செம்மரக்கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. சமீப காலமாக அவரின் செம்மரக்கடத்தல் தொழிலுக்கு உதவியாக கூலித் தொழிலாளிகள் யாரும் முன்வரவில்லை, எனவே 6 மாதங்களாக தானே நேரடியாக செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு, தற்போது போலீசாரிடம் சிக்கி கொண்டதாக கூறினார்.

இதையடுத்து நசீரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து காருடன், செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com