இந்திய அணியின் முன்னணி இடது கை சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருபவர் ரவீந்திர ஜடேஜா. சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் இவர் இந்திய அணிக்காக கடந்த 9 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக ஜடேஜா 34 டெஸ்ட், 136 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த நேற்றுமுன்தினம் 29 வயதை பூர்த்தி செய்த ஜடேஜா, தன்னை ரசிகர் ஒருவர் ‘அஜய்’ என்று அழைத்ததால் ஆதங்கம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ரசிகர் ஒருவர் என்னிடம் வந்து, சிறப்பாக பவுலிங் செய்தீர்கள் அஜய். கடந்த போட்டியில் உங்களது பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது என்றார். நான் கடந்த 9 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். ஆனால், ரசிர்கள் இன்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லை’’ என்று கோபப்பட்டுள்ளார்.
அசாருதீன், சச்சின், டிராவிட், கங்குலி விளையாடிய காலத்தில் அஜய் ஜடேஜா என்ற ஆல்ரவுண்டர் விளையாடி வந்தார். மேட்ச் பிக்சிங் புகாருக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.