

கொச்சி :
ரஞ்சி கிரிக்கெட்டில் 2002-ம் ஆண்டில் இருந்து கர்நாடக அணிக்காக விளையாடி வந்த விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா இந்த சீசனில் அணி மாறி கேரளாவுக்காக விளையாட உள்ளார்.
இது குறித்து கேரள கிரிக்கெட் சங்க செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் கூறுகையில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில், பெங்களூருவில் நடந்த ஆட்டத்தின் போது உத்தப்பாவை தனியாக சந்தித்து பேசினோம். அப்போது அவர் கேரள அணிக்காக விளையாட ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தார். அனேகமாக இந்த வாரத்தில் கேரள ரஞ்சி அணியில் அவரது பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு ஒரு வீரர் தேவை என்ற நிலையில் தான், உத்தப்பாவை கவனத்தில் கொண்டோம். உத்தப்பா மலையாளமும் பேசக்கூடியவர். அதனால் மொழிப்பிரச்சினை இருக்காது. அணியில் இணைவதற்கு அவர் என்ன நிபந்தனை விதித்தார்? என்று கேட்கிறீர்கள். அது பற்றி இப்போது பேச விரும்பவில்லை. அதற்குரிய நேரம் வரும் போது அது பற்றி சொல்கிறேன்’ என்றார்.
31 வயதான உத்தப்பா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடி 388 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.