ராமேசுவரம் மீனவர்கள் மீது வெடிகுண்டு வீச்சு- இலங்கை கடற்படை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் நாட்டுவெடிகுண்டு வீசியதால் பதட்டம் உருவானது. #Fishermen #SriLankaNavy #TNFishermen
ராமேசுவரம் மீனவர்கள் மீது வெடிகுண்டு வீச்சு- இலங்கை கடற்படை அட்டூழியம்
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது திரும்பி செல்லுங்கள் என எச்சரித்தனர்.

இதனைத்தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குள் நுழைந்து அங்கு இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் தூக்கி எறிந்தனர். மேலும் மீனவர்கள் மீது இரும்பு பைப், கற்களை வீசி தாக்கினர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் ஒரு படகில் ‘டமார்’ என வெடி சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த படகின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. மீனவர்கள் உடனடியாக அதனை அணைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக கரை திரும்பினர்.

கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே இலங்கை கடற்படையினர் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று அவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை. ஆனால் படகு மட்டும் சேதம் அடைந்தது. இதே நிலை நீடித்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றனர். #Fishermen #SriLankaNavy #TNFishermen

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com