

புதுடெல்லி:
டெல்லி மேல்-சபைக்கு குஜராத் மாநிலத்தில் இருந்து 3 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 8-ந் தேதி நடக்கிறது. இந்த 3 இடங்களுக்கு பா.ஜனதா தரப்பில் அதன் தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளரான அகமது பட்டேலும் போட்டியிடுகின்றனர்.
3 இடத்துக்கு 4 பேர் போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அகமது பட்டேலை தோற்கடிக்கும் நோக்குடன் 3-வது வேட்பாளரை பா.ஜனதா நிறுத்தி இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தனது கட்சியின் 44 எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசுவிடுதியில் பாதுகாப்பாக தங்க வைத்தும் இருக்கிறது.
இந்த நிலையில் டெல்லி மேல்-சபைக்கான எம்.பி. தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் ‘நோட்டா’ ஓட்டுச்சீட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியானது. நோட்டா இடம்பெற்றால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பலர் அகமது பட்டேலுக்கு ஓட்டுப்போடாமல் நோட்டாவுக்கு தங்களுடைய வாக்கை செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நேற்று இவ்விவகாரத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில், நோட்டா அறிமுகம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிகிறது.