காவிரி தண்ணீருக்காக கட்டாயம் ரஜினி போராடியாக வேண்டும்- நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி அரசியல்வாதியாகி விட்டதால் காவிரி தண்ணீருக்காக கட்டாயம் போராடியாக வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
காவிரி தண்ணீருக்காக கட்டாயம் ரஜினி போராடியாக வேண்டும்- நடிகர் எஸ்.வி.சேகர்
Published on

நெல்லை:

இந்து தர்ம மேம்பாட்டிற்கான சேவை அமைப்பின் சார்பில் நெல்லையில் இந்துக்கள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் நடிகர் எஸ்.வி.சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறவில்லை. உச்சநீதி மன்ற தீர்ப்பில் உள்ள ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு காலஅவகாசம் கேட்டு உள்ளது. அதற்குள் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

நடிகர் சங்கத்தின் சார்பில் மவுன போராட்டம் நடத்தி உள்ளனர். நடிகர் சங்க தலைவர் விஷால், நிர்வாகத்திற்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. அவரால் நடிகர் சங்க கட்டிடத்தை கூட கட்ட முடியவில்லை. அவர் 50 வருடங்களுக்கு மேலாக உள்ள காவிரி பிரச்சினை உடனே முடிக்கவேண்டும் என்று கூறுகிறார். அவரும் அரசியல் செய்யவேண்டும் என்று இந்த பிரச்சினையை கையில் எடுத்து உள்ளார்.

காவிரியில் தமிழகத்தில் தடுப்பணையே கட்டவில்லை. தண்ணீரை சேமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சியினர் இருந்தனர். அப்படி தடுப்பணை கட்டி இருந்தால் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து இருக்கும். ரஜினியும் அரசியல்வாதியாகிவிட்டார். அவர் கட்டாயம் போராடி ஆகவேண்டும்.

தமிழகத்தில் மக்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள். இதற்கு காரணம் தமிழக அரசு செயல் இழந்து இருப்பதே முக்கியகாரணமாகும். ஜெயலலிதா இருக்கும் வரை இப்படி எந்த போராட்டமும் வந்தது இல்லை. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்று பார்க்கக்கூடாது. அவர் திறமையானவரா? என்று பார்க்கவேண்டும்.

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராடுகிறவர்கள் இவ்வளவு நாள் எங்கே சென்றார்கள். தற்போது விரிவாக்கத்திற்கு கமி‌ஷன் கிடைக்காத அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை தூண்டிவிட்டு உள்ளனர். இந்த பிரச்சினைக்கும் மோடிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு என்னவேண்டுமானாலும் செய்வார். எப்படியும் அவரால் ஆட்சிக்கு வர முடியாது. பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி தான் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com