மக்களை பாதிக்காத வகையில் பால் விலை உயர்த்தப்படும் - ராஜேந்திர பாலாஜி பேட்டி

மக்களை பாதிக்காத வகையில் பால் விலை உயர்வு இருக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Published on

சாத்தூர்:

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கே:- பால் விலை உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் அறிவித்துள்ளாரே?

பதில்:- பால் விலை உயர்த்தப்படும் என்று முதல் -அமைச்சர் கூறவில்லை. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? என்று கேட்டார்கள். அதற்கு முதல்-அமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் பாதிப்பு ஏற்படும். எனவே கொள்முதலும், நுகர்வோரும் பாதிக்காத வகையில் அந்த பணி இருக்கும் என்றார்.

கே:-மத்திய பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப:- வளமான நாடாக, ஏழைகள் இல்லாத நாடாக அமைய மத்திய பட்ஜெட் வழிவகுத்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே?.

ப:- மு.க.ஸ்டாலின் எதைத்தான் நல்லது என்று சொல்வார்? ராகுலை பிரதமர் என்றார். அவர் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார். அவர் எதிர்கட்சி. அப்படித் தான் கூறுவார்.

கே:-அ.தி.மு.க. அரசை தி.மு.க. தான் வழி நடத்துகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே?.

ப:-அ.தி.மு.க.வை அ.தி.மு.க. தான் வழி நடத்துகிறது. நல்லாட்சி நடக்கிறது என்று தி.மு.க. கூறுகிறது. அவர்கள் பேசாமல் அ.தி.மு.க.வில் இணைந்து கொள்ளவேண்டியது தானே.

கே:-மழை நீர் சேகரிப்பு கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசா? தி.மு.க. அரசா?

கே:- மழைநீர் சேகரிப்பு கொண்டு வந்தது ஜெயலலிதாதான். அவரை பின் பற்றியது தி.மு.க.

கே:-நதி நீர் இணைப்பு பற்றி பட்ஜெட்டில் எதுவும் இல்லையே?

ப:-பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதுதான் நடைமுறைக்கு வரும் என்பது இல்லை. அரசு நினைத்தால் எந்த திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ஜலசக்தி துறை என்று கொண்டு வந்துள்ளனர். அதில் நதி நீர் இணைப்பு வரும்.

கே:-பட்ஜெட்டில் பெட்ரோல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியால் விலைவாசி உயர்வு வரும். அதை தமிழக அரசு எப்படிபார்க்கிறது?

ப:-இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட நிலைப்பாடு. தமிழகம் மட்டும் அல்ல பொருளாதார உயர்வு வரவர, சம்பள உயர்வுகள் வரவர விலைவாசி உயரத் தான் செய்யும். மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த விலைவாசி உயர்வு இருக்கும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com