மாணவியை கற்பழித்தவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவியை கற்பழித்தவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம்
நீதிமன்றம்
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி பள்ளி இடைவேளை நேரத்தில் வெளியே சென்ற போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து 4 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் மாணவியை கற்பழித்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த யெஷ்வீர், பஞ்சாப்சிங் என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தோல்பூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான வாலிபர்களுக்கு போக்சோ கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, ராஜஸ்தான் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில், தனது மகள் கற்பழிப்பு வழக்கில் கைதான வாலிபர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், கீழ் கோர்ட்டில் கற்பழிப்பு வழக்கில் கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் கைதான வாலிபர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு சம்பந்தப்பட்ட போக்சோ கோர்ட்டு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com