

புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 14 மற்றும் 8 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
மனைவி வேலைக்கு சென்றதும் கணவர் தனது 14 வயது மகளை வீட்டில் யாரும் இல்லாதபோது பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை தாயிடமோ அல்லது வேறு யாரிடமோ சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்ததால் சிறுமி பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாய் வீட்டில் இல்லாதபோது மீண்டும் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் தாய் வீட்டுக்கு வந்தவுடன் மகள் சோர்வாக இருப்பதை பார்த்து விசாரித்துள்ளார். அதற்கு சிறுமி அப்பா தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்சியடைந்த தாய் உடனடியாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ டிரைவரை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக முதல் மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும், இதேபோல் அவரது 8 வயது இளைய மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.