

செய்யாறு:
செய்யாறு தாலுகா வாழ்குடை கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு எரிவதில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிராம ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று தெருவிளக்குகள் எரியவில்லை சரிசெய்து தரும்படி கோரிக்கை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 6 மாதங்களாக தெருவில் மின்விளக்கு எரியாமல் கிராமமே இருளில் மூழ்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் இருண்ட சூழ்நிலையில் ஆங்காங்கே வீட்டில் எரியும் விளக்கின் வெளிச்சத்தில் பெரும் அச்சத்துடனே தெருக்களில் சென்று வருவதாக கூறப்படுகிறது.
தற்போது மழையின் காரணமாக செடிகள் அடர்த்தியாக வளர்ந்து விஷப்பூச்சிகள், பாம்பு முதலியவை இரவு நேரங்களில் வருவதால் இக்கிராமத்தில் பொதுமக்கள் குழந்தைகளுடன் வெளியில் வரவே அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர்.
விவசாய நிலத்திற்கு நீர்பாசனம் செய்ய வெளியில் அச்சத்துடனே விவசாயிகள் தெருக்களில் செல்லுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி மின்கம்பத்தில் கட்டி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.