

கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 9 குழுக்களாக பிரிந்து போலீசார் நடத்தி வரும் விசாரணையில் நாளுக்கு நாள் பல்வேறு தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது. இன்று 4-வது நாளாக நிர்மலாதேவியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அருப்புக்கோட்டை ஆத்திபட்டியில் உள்ள நிர்மலாதேவியின் வீட்டில் சோதனை நடத்திய போது டைரி சிக்கியது. அதில் பல்வேறு நபர்களின் பெயர்கள் இருந்தன. காண்டிராக்டர், பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இருந்ததை பார்த்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அதில் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் அவர்களது பின்னணி குறித்து முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் நிர்மலா தேவியுடன் வைத்திருந்த தொடர்புகள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த முக்கிய புள்ளிகளின் பட்டியலும் சேகரிக்கப்பட்டுள்ளது.
நிர்மலாதேவியுடன் தொடர்பு வைத்திருந்தவர்களில் மதுரையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரின் கணவரும் சிக்கியுள்ளார். இவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் நிர்மலாதேவியின் டைரியில் உள்ள முக்கிய புள்ளிகளிடமும் விசாரணையை முடுக்கி விட சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் நிர்மலாதேவியுடன் தொடர்பு வைத்திருந்த முக்கிய புள்ளிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. #AruppukottaiProfessor #NirmalaDevi