

பாவூர்சத்திரம் :
புரோ கபடி போட்டிகள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு நிலவி வருகிறது. 5-வது புரோ கபடி லீக் போட்டிகள் அடுத்த (ஜூன்) மாதம் தொடங்க உள்ளது. கடந்த 4 சீசன்களில் 8 அணிகள் மோதிய இப்போட்டியில் இந்த ஆண்டு புதிதாக 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் அணிக்கு நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டியை சேர்ந்த கபடி வீரர் கலையரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பெத்தநாடார்பட்டி அசத்தல் கபடி அணி சார்பிலும், அண்ணா பல்கலைக்கழக அணி சார்பிலும் விளையாடி உள்ளார். குஜராத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கலையரசனை பெத்தநாடார்பட்டி பொதுமக்கள் பாராட்டினர்.