தாய் கண் முன்னே தனியார் பள்ளி பேருந்து மோதி 2½ வயது குழந்தை நசுங்கி பலி

அரியலூர் அருகே தாய் கண் முன்னே 2½ வயது குழந்தை நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாய் கண் முன்னே தனியார் பள்ளி பேருந்து மோதி 2½ வயது குழந்தை நசுங்கி பலி
Published on

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள சோழன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன், விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதிக்கு நவீன், நிதிஷ் (வயது 2½) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

நவீன் செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்ட அவனை அனுப்பி வைப்பதற்காக அவனது தாய் கலைச்செல்வி வெளியே அழைத்து வந்தார். உடன் நிதிஷூம் வந்துள்ளான்.

அப்போது தனியார் பள்ளிக்கு சொந்தமான வேனும் அங்கு வந்தது. பள்ளி வேனில் நவீனை ஏற்றி விட்டார். அதே சமயம் நிதிஷ் வேனுக்கு பின்னல் நின்று கொண்டிருந்தான். நவீன் ஏறிய பின்னர் வேனை டிரைவர் பின்னோக்கி இயக்கினார்.

அப்போது அங்கு நின்ற நிதிஷ் படிக்கட்டின் பக்க வாட்டில் சிக்கி வேனுக்கு அடியில் இழுத்து செல்லப்பட்டான். அடுத்த வினாடி வேன் சக்கரம் நிதிஷ் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தான்.

இதைப்பார்த்த அவனது தாய் கலைச்செல்வி கதறித் துடித்தார். பின்னர் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் நக்கம்பாடியை சேர்ந்த செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் கண் முன்பு குழந்தை உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com