பொள்ளாச்சியில் அரசு பஸ்சை சிறை பிடித்த தனியார் பஸ் டிரைவர்கள்

பொள்ளாச்சியில் அரசு பஸ்சை சிறை பிடித்து தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி- கோவை சாலை விரிவாக்க பணி மற்றும் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பஸ்களை இயக்குவதில் காலதாமதம் இருந்து வருகிறது.இதனால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு புறப்படும் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே நேர பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

நேற்று காலை 11.15 மணியளவில் பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு தனியார் பஸ் கிளம்ப தயாராக இருந்தது. அப்போது அரசு பஸ் டிரைவர் தனியார் பஸ் முன் நிறுத்தி பயணிகளை ஏற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் பஸ் நிலையத்திற்குள் இருந்த மற்ற தனியார் பஸ் டிரைவர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் கிடைத்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அங்கு வந்தார். அவர் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பஸ்கள் இயக்கப்படும் கால நேரம் குறித்து தனியாக கூட்டம் நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பஸ்கள் 30 நிமிடம் தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com