

பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அஹ்ரகாரா சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக டிஜஜி ரூபா குற்றம்சாட்டினார். இதனையடுத்து, டிஐஜி ரூபா அதிரடியாக மாற்றப்பட்டனர். குற்றச்சாட்டுக்கு ஆளான சிறைத்துறை கூடுதல் டிஜிபி சத்திய நாராயண ராவ் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வளர்ந்துள்ளது.
இறுதியாக சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற கோரி இரு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு சார்பில் புதிதாக மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. கைதிகள் உரிமை மையம் அமைப்பு சார்பில் அதன் வழக்கறிஞர் புகழேந்திர இந்த மனுவை அனுப்பியுள்ளார்.
முன்னதாக, தொடர் சர்ச்சைகளால் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.