

மதுரை:
மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோடு யோகனந்தா சுவாமி மடம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 55), ம.தி.மு.க.வில் தொழிற்சங்க நிர்வாகியாக உள்ளார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.
இளங்கோவன் பொன்மேனி பகுதியில் அச்சக நிறுவனம் நடத்தி வந்தார். இதற்கிடையே தொழிலை விரிவுபடுத்த சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்தநிலையில் கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொழில் முடங்கியதால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு அவர் அலுவலகத்திற்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். இரவில் வெகுநேரமாகியும் இளங்கோவன் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் தேட தொடங்கினர். இதற்கிடையே அச்சக அலுவலகத்தில் ரத்தவெள்ளத்தில் இளங்கோவன் இறந்து கிடந்தார்.
போலீசார் விரைந்து வந்து உடலை பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதன் மூலம் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
அதில் “தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதி வைத்திருந்தார். ஆனால் விஷம் குடித்து அவரது உயிர் போகவில்லை. இதனால் அவர், கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவங்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.