தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்காக மத்திய மந்திரிகளை விமர்சிப்பதா? பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்காக மத்திய மந்திரிகளை விமர்சிப்பதை தமிழக மக்கள் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்காக மத்திய மந்திரிகளை விமர்சிப்பதா?  பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
Published on

சென்னை:

சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிக்கப்பட்டு சமஸ்கிருதம் திணிக்கப்பட்டதாக அந்த விழாவில் பங்கேற்று இருந்த மத்திய மந்திரிகள் நிதின்கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை பல்வேறு கட்சிகள் விமர்சித்துள்ளன.

இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அன்னை தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி என்றும் சமஸ்கிருதத்துக்கும் முந்தைய மொழி என்றும் பிரதமர் மோடியே போற்றி புகழும் மொழி. அப்படிப்பட்ட பிரதமரின் தலைமையின் கீழ் பணியாற்றும் மத்திய மந்திரிகளை தமிழை புறக்கணித்து விட்டதாக விமர்சிப்பதை தமிழக மக்கள் யாரும் ஏற்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் அனைத்து அரசு நிறுவனங்கள், நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும் என்பதுதான் எனது கருத்தும்.

ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சி பற்றி விமர்சிப்பவர்கள் அரசியலுக்காக சர்ச்சையை கிளப்புபவர்கள் என்பது மக்களுக்கு புரியும்.

நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றபோது அரங்கம் நிறைந்து இருக்கிறது. இறை வணக்கம் பாடப்படுவதாக அறிவித்ததும் அனைவரும் எழுந்து நின்றோம்.

தமிழ்த்தாய் பாடலை விட்டு விட்டார்கள் என்பது எனக்கும் புரிந்தது. அதற்காக அந்த நிகழ்ச்சியில் உடனே குறுக்கிட முடியுமா? ஒரு வேளை குறுக்கிட்டு பாடச் சொன்னால் அவர்களுக்கு பாடத் தெரியுமா? தெரியாதா? என்று சிந்திக்க வேண்டாமா? இன்று தமிழ் தமிழ் என்று குதிப்பவர்கள் பொது மேடையில் தமிழ் பற்றி தவறாக சொல்லி அவமானப்பட்ட வரலாறும் இருக்கிறது.

ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அதை நடத்தும் நிறுவனம் அல்லது அமைப்புகளிடம் இன்னென்ன மாதிரிதான் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்துவதில்லை.

கல்லூரியின் துறை தலைவர் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க சொல்லி இருப்பார். மாணவர்கள் நிகழ்ச்சியை தயாரித்து இருப்பார்கள்.

அங்கு தமிழ் மாணவர்களே நிறைந்து இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் இந்த மாதிரி உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ் மாணவர்கள் அதிக அளவில் வர முடியாமல் கெடுத்தது தி.மு.க. இந்த கழகங்கள் ஒழிந்தால்தான் கலகங்கள் இல்லாத நல்ல சமுதாயம் உருவாகும். அரசியல் ஆதாயத்துக்காக மாணவர்களை தூண்டுவது, மந்திரிகளை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com