

மதுரை:
மதுரை அருகே சிக்கந்தர் சாவடியில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியே 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படையினர் சிக்கந்தர் சாவடியில் சம்பவ இடத்துக்கு செல்வ தற்கு முன்பாகவே ரவுடி மாயக்கண்ணன், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.
முத்து இருளாண்டியின் மனைவி முத்துலட்சுமி, மைத்துனர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவ ரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்தது மாயக்கண்ணனின் வீடு தான். அப்போது அவரது குடும்பத்தினர் அங்கு இல்லை. மாயக்கண்ணன் பிடிபட்டால் தான் அவர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? என்பது தெரிய வரும்.
செல்லூர் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது மாயக்கண்ணனை பார்க்கவில்லை. ஆனாலும் போலீஸ் விசாரணையின் போது அவர் தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாலமுருகன் என்ற போலீஸ்காரர் கதவை தள்ளும் போது அவரது கைவிரல் கதவு இடுக்கில் சிக்கி காயம் ஏற்பட்டது.
இதையடுத்து குற்றவாளிகள் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இது எதிர்பாராமல் நடந்த நிகழ்வாகும்.
சிக்கந்தர் சாவடியில் சம்பவம் நடந்த சமயத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் போலீஸ் சீருடையில் இருந்தார். மற்ற போலீசார் சாதாரண உடையில் (மப்டியில்) இருந்துள்ளனர்.
போலீசார் தாக்குதலின் போது குற்றவாளியின் காது பகுதி பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. ஆனாலும் பிரேத பரிசோதனை நடந்த பிறகு தான் இது பற்றிய முழு விவரங்களும் தெரியவரும்.
செல்லூர் போலீஸ் தனிப்படை இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகிய இருவர் மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்லூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
குற்றவாளிகளை அலங்காநல்லூரில் கைது செய்ததாக வந்த தகவல் தவறானது. இது தொடர்பாக சமயநல்லூர் போலீஸ் டி.எஸ்.பி. மோகன் குமாருக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். சிக்கந்தர் சாவடி சம்பவத்தில் குற்றவாளியிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை மட்டும் வைத்துக் கொண்டு மதுரையில் துப்பாக்கி கலாச்சாரம் இருப்பதாக பொருள் கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews