

சேலம்:
பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை, எளிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் பயனாளிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் அவர்களது வங்கி கணக்கில் தொகை செலுத்தப்படும். இதற்காக ஆன்லைன் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் போலியாக ஆவணங்களை தயாரித்து விவசாயிகள் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலும் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகள் என்ற போர்வையில் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த மோசடி தொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதில், 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சேவை மையம் நடத்தி வந்த தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ராகுல், கலையரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராகுல் 160 பேருக்கு போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து உள்ளதும், கலையரசன் 34 பேருக்கு போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் ஆதார் எண் வழங்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தான் நிதி உதவி வழங்கப்படும். ஆனால் ஒரு வீட்டில் இருக்கும் 4 பேருக்கு கூட இவர்கள் போலியாக விவசாய ஆவணங்களை தயாரித்து கொடுத்துள்ளனர். இதற்காக ஒருவருக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை கமிஷன் பெற்றுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் மோசடியாக பணம் பெற்றவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க மாவட்ட கலெக்டர் ராமன், வேளாண்மை துறை அதிகாரிகள் தலைமையில் தனி குழு ஒன்றை அமைத்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த குழுவினர் பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் பணம் பெற்று உள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று பணத்தை திரும்ப வசூல் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.1 கோடியே 20 லட்சம் திரும்ப பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகளின் துணை இல்லாமல் இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் இந்த நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மீதமுள்ள 17 ஒன்றியங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் யார்? யார்? அவர்களது வங்கி கணக்கில் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உண்மையான விவசாயிகள் தானா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி முடித்தால் மட்டுமே இந்த மோசடியில் அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்குமா? என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.