திருச்சி அரியமங்கலத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: அதிர்ச்சியில் மூதாட்டி மரணம்

திருச்சி அரியமங்கலத்தில் நேற்று மாலை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எதிர் வீட்டில் வசித்த மூதாட்டி அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.
திருச்சி அரியமங்கலத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: அதிர்ச்சியில் மூதாட்டி மரணம்
Published on

திருவெறும்பூர்

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகில் உள்ள  ஜெகநாதபுரத்தில் அழகர் மற்றும் சுடர்மணி ஆகியோருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் சேகரிப்பு குடோன் உள்ளது. சுமார் 20 வருடமாக செயல்படும் இந்த பிளாஸ்டிக் குடோனில் பழைய பிளாஸ்டிக்கை தரம் பிரித்து அதனை தூளாக்கி பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு விற்பனை செய்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்று மாலை அந்த குடோனில் தீப்பற்றியது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இதையடுத்து நள்ளிரவு மீண்டும் குடோனில் தீப்பற்றியது. அப்பகுதியினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. 

மேலும் திறந்தவெளியில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததால் அதில் பற்றிய தீயானது காற்றின் வேகம் காரணமாக பரவியது. 

இதையடுத்து அவர்கள் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத் திற்கு வந்த கண்டோன் மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் தனபால் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். பிளாஸ்டிக் என்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தாலும் தீயை கட்டுக்குள் கொண்டு தீயணைப்பு துறையினர் போராடினர். 

5 தீயணைப்பு வாகனங்கள், 6 தண்ணீர் லாரிகள் மூலம் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தினர். 

இதற்கிடையில் பிளாஸ்டிக் குடோனில் தீப்பற்றி எரிந்ததை பார்த்த கூச்சலிட்ட எதிர் வீட்டுக்காரரான சரோஜா (65) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரோ கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் தீ விபத்து ஏற்பட்டதில் கட்டிடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். ஆகவே உயிரிழப்பு ஏற்படுத்துவதற்கு முன் இந்த கட்டிடத்தினை இடித்து தரை மட்டமாக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதியில் இதுபோன்ற குடோன்களை வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதியளிக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட குடோன்களுக்கு அருகில் குடியிருப்புகள், மர அறுவை மில் உள்ளன. அதிர்ஷ்டவசமாக அவைகள் தப்பின. இந்நிலையில் தீயணைக்கப்பட்ட குடோனில் மீண்டும் இன்று காலை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தீ தொடர்ந்து எரிவதால் அதில் வரும் கரும்புகையானது அதன் சுற்று வட்டார பகுதியில் பரவி பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரும் வரை நிரந்தரமாக ஒரு தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி கண்காணிக்க வேண்டும். இல்லையேல் அருகில் உள்ள மர அறுவை மில், பர்னிச்சர் தயாரிக்கும் ஆலை, குப்பை கிடங்கு ஆகியவற்றில் தீப்பிடித்து பேராபத்தை ஏற்படுத்தும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். 

மேலும் தீப்பற்றி எரிந்த குடோனுக்கு அருகிலேயே 2 பிளாஸ்டிக் குடோன் உள்ளது . இதுபோன்று விபத்து ஏற்படுத்துவதற்கு முன் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com