சேலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: மனைவி-குழந்தைகள் கதறல்

அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: மனைவி-குழந்தைகள் கதறல்
Published on

சேலம்:

சேலம், அழகாபுரம், பெரியபுதூர் ஒடசகரை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பூபதி (வயது 29). வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புனிதவதி. இவர்களுக்கு தர்ஷன் என்ற மகனும், விகாஷினி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், பூபதிக்கும், புனிதவதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வரும் என தெரிகிறது. நேற்று இரவு இதே போல் மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த பூபதி, வீட்டில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுகிறது. நான் இல்லா விட்டால் இனிமேல் தகராறு ஏற்படாது. ஆகவே உயிரை விடுவதே மேல் என முடிவு செய்தார்.

நள்ளிரவு மனைவியும், குழந்தைகளும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.  பூபதி மட்டும் எழுந்து சென்று சேலையை கழுத்தில் கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன் அவர், தனது குழந்தைகளை பார்த்து கண்கலங்கியதாக தெரிகிறது. உங்களை விட்டு நான் செல்கிறேன். அம்மா உங்களை நல்ல முறையில் வளர்ப்பார் என நினைத்து அவர் கண்கலங்கியதாக கூறப்படுகிறது.

இன்று காலை மனைவி புனிதவதி எழுந்து பார்த்தபோது, தன் கண் முன்னே கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். தந்தையின் உடலை பார்த்து குழந்தைகளும் கதறி அழுதனர். அழுகுரலை கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு ஓடி வந்து கழுத்தில் இருந்து சேலையை அவிழ்த்து பூபதி உடலை கீழே இறக்கினார்கள்.

பின்னர் அழகாபுரம் போலீசார், அங்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com