

பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள சின்ன கிளாம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சரத்குமார்.
இந்து மக்கள் கட்சியில் திருவள்ளூர் மாவட்ட அமைப்பு தலைவராக உள்ளார். விவசாயம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆட்கள் அனுப்பும் தொழிலும் செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் பெரியார் சிலை குறித்து பதிவிட்டிருந்தார். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எச்.ராஜாவின் பேச்சு குறித்து விளக்க பொதுக்கூட்டங்களை பெரியபாளையம், செங்குன்றம் பகுதியில் நடத்த சரத்குமார் திட்டமிட்டு இருந்தார். மேலும் பெரியார் பற்றி அவர் தனது ‘வாட்ஸ்-அப்’ பில் சில கருத்துகள் பதிவிட்டு இருந்ததாக தெரிகிறது.இதற்கிடையே பொதுக் கூட்டம் நடத்த சரத்குமாருக்கு பெரிய பாளையம் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை அணுகும்படி போலீசார் கூறி இருந்தனர்.
எனினும் பொதுக் கூட்டம் நடத்தும் முயற்சியில் சரத் குமார் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென சரத்குமார் வீட் டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
அவை வீட்டின் முன் பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மொத்தம் 4 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இதில் வீட்டின் முன்பு கிடந்த கட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு சரத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்தனர். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பதை கண்டு சரத்குமாரும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்குள் அக்கம் பக்கத்தினரும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் வீட்டு முன்பு எரிந்த தீயை அணைத்தனர்.
இது குறித்து பெரியபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சந்திரதாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அங்கு வெடிக்காமல் கிடந்த 2 பெட்ரோல் குண்டுகளை அவர்கள் கைப்பற்றினர்.
வீட்டு முன்பு விழுந்து பெட்ரோல் குண்டு வெடித்ததால் அறையில் தூங்கிய சரத்குமார். அவரது மனைவி, குழந்தை மற்றும் தாய் ராஜேஸ்வரி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். ராஜேஸ்வரி முன்னாள் ஊராட்சி தலைவர் ஆவார்.
இதுபற்றி அறிந்ததும் இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் சோமு ராஜசேகர் மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு வந்தனர். அவர்கள் சரத்குமாரிடம் நடந்த விபரங்கள் குறித்து கேட்டு அறிந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு கோவையில் பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தற்போது இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews