

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் 1931–ம் ஆண்டு ஜூலை 13–ந் தேதி டோக்ரா மன்னருக்கு எதிராக ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலைக்கு வெளியே பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில், 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் காஷ்மீரில் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் 86-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது
இதையொட்டி காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது கட்சியினருடன் சேர்ந்து இறந்த தியாகிகளின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் மெகபூபா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மெகபூபா பல தகவல்களை கூறியுள்ளார்.
‘ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை மாற்றி வளமான வாழ்வை பெற மக்கள் பயத்தை எதிர்த்து போராட வேண்டும். நாட்டிற்காக இறந்தவர்களின் தியாகத்தை வீணாக்காமல் ஜம்மு மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். மேலும் அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து குரல் கொடுக்க வேண்டும். உலகத்தில் உள்ள அனைவருக்கும் நாம் ஒற்றுமையாக உள்ளோம் என்பதை காண்பிக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து இருப்போம்’ என மெகபூபா கூறியுள்ளார்.
கூட்டணி கட்சியான பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.