லாஸ்பேட்டையில் கடிதம் எழுதிவைத்து விட்டு நோயாளி தற்கொலை

உடல்நலக்குறைவால் அவதி அடைந்த நோயாளி விடுதியில் ரூம் வாடகைக்கு எடுத்து கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

லாஸ்பேட்டை மெயின் ரோடு புதுப்பேட்டையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

மேலும் ஜிப்மரில் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனாலும், நோய் குணமாகவில்லை. இதனால் வேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பெருமாள் தனது நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு செல்வதாக தனது தாய் சரோஜாவிடம் கூறி சென்றார்.

ஆனால், அதன்பிறகு பெருமாள் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சரோஜா தனது உறவினர் ராஜாவிடம் தெரிவித்து பெருமாளை தேடிப்பார்க்கும்படி கூறினார்.

இதையடுத்து ராஜா விசாரித்த போது, சம்பவத்தன்று பெருமாள் அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் ஏறி புறப்பட்டு சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, பெருமாள் புதுவை காமராஜர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் இறக்கி விட்டதாக தெரிவித்தார்.

இந்த தகவலின் பேரில் விடுதியில் விசாரித்த போது பெருமாள் ரூம் வாடகை எடுத்து தங்கி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், பெருமாள் தங்கி இருந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து கதவை உடைத்து பார்த்த போது, அங்கு மின் விசிறியில் பெருமாள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு ராஜா அதிர்ச்சி அடைந்தார். அங்கு பெருமாள் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும், நோய் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com