

பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ் 2 ஆண்டுகளுக்கு முன்பு “பதஞ்சலி” எனும் நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கையான பொருட்களை குறைந்த விலையில் பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்யும் என்று ராம்தேவ் அறிவித்தார்.
ரசாயன கலப்பு இல்லாமல் பிஸ்கட், கிரீம்கள், பற்பசை, ஆயுர்வேத மருந்துகள், நெய், எண்ணெய், சோப் உள்பட அனைத்து வகை பொருட்களையும் பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முதலில் ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே விற்ற இந்த நிறுவனத்தின் இயற்கை பொருட்களுக்கு மக்களிடம் மிகுந்த ஆதரவு கிடைத்தது.
தற்போது நாடெங்கும் சுமார் 6 ஆயிரம் இடங்களில் பதஞ்சலி நிறுவனம் இயற்கை தயாரிப்பு, உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. சுமார் 500 வகையான பொருட்கள் பதஞ்சலி நிறுவனம் மூலம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பதஞ்சலி நிறுவன பொருட்களை இந்தியர்கள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிந்த 2016-17 நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனம் ரூ.10 ஆயிரத்து 561 கோடியை வருவாயாக ஈட்டி உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களை விற்று வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மல்டி நேஷனல் கம்பெனிகளை பதஞ்சலி விரட்டியுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் அபரிதமான இந்த வளர்ச்சியில் பல புகழ்பெற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.
தற்போது இந்தியாவில் நுகர்பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்யும் நிறுவனங்களில் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்துக்கு அடுத்த படியாக பதஞ்சலி நிறுவனம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐ.டி.சி., நெஸ்லே, டாபர், இமாமி போன்ற நிறுவனங்களை பதஞ்சலி பின்னுக்குத் தள்ளியுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் விற்ற இயற்கை பொருட்களில் நெய் நாடெங்கும் அதிக அளவில் விற்பனை ஆகி இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஓராண்டில் ரூ.1467 கோடி மதிப்புள்ள நெய்யை பதஞ்சலி நிறுவனம் விற்றுள்ளது.
பற்பசை, ஆயுர்வேத மருந்துகள், எண்ணெய் ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.
நுகர்பொருட்கள் விற்பனையில் சாதனை படைத்து வரும் பதஞ்சலி நிறுவனம் அடுத்த கட்டமாக இந்தியா முழுவதும் ஓட்டல்கள் தொடங்க திட்டமிட்டுள்ளது. அது போல அடுத்த நிதியாண்டில் வருவாயை இரட்டிப்பாக்கவும் முடிவு செய்துள்ளது.