

கோவை:
நாமக்கல் மாவட்டம் வெட்டாம்பட்டியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் பிரதீபா (வயது 25). இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அலூர் பிரிவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
பிரதீபா வாலிபர் ஒருவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இந்த விஷயம் அவரது பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிப்பு தெரிவித்தனர்.
ஆனால் பிரதீபா தனது பெற்றோரிடம் தான் காதலிக்கும் வாலிபரையே தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது பெற்றோர் இதனை ஏற்க மறுத்து பிரதீபாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் பிரதீபா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
காதலனை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரதீபா பள்ளி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் கிணத்துக்கடவு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.