பரமத்திவேலூரில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

பரமத்திவேலூரில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரமத்திவேலூரில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி சார்பில் 15 வார்டுகளுக்கு காவிரி ஆற்றில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீரில் இல்லாததால் குடிநீர் விநியோகம் குறைந்தது.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் சீராக குடிநீர் வழங்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனு மீது அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த 7-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் திரண்டு பரமத்திவேலூர் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் போலீசார் பேரூராட்சி அதிகாரிகளை அழைத்து 7-வது வார்டு பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com