பாளை அருகே லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை- காப்பாற்ற முயன்ற மனைவியும் பலி

பாளை அருகே குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
பாளை அருகே லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை- காப்பாற்ற முயன்ற மனைவியும் பலி
Published on

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள திருவேங்கடநாதபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது38). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரத்தினம் (32). இவர்களுக்கு அதிசயா (9), சுபஸ்ரீ (6) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

சங்கரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று அவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். மதுபோதையில் இருந்த அவர் மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சங்கரன் திடீரென அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனே மனைவி ரத்தினம் அவரை காப்பாற்ற முயன்றார். இந்த சம்பவத்தில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சங்கரன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த ரத்தினத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் ரத்தினம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com