கோவாவில் பத்மாவத் படம் திரையிட அனுமதிக்க கூடாது: மாநில அரசுக்கு போலீஸ் கடிதம்

கோவாவில் ‘பத்மாவத்’ படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று மாநில அரசுக்கு போலீஸ் சார்பில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.
கோவாவில் பத்மாவத் படம் திரையிட அனுமதிக்க கூடாது: மாநில அரசுக்கு போலீஸ் கடிதம்
Published on

பனாஜி:

நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படம் ‘பத்மாவத்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டும் காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் திரையிட சென்சார் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.

வருகிற 25-ந்தேதி ‘பத்மாவத்’ படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சென்சார் போர்டு அனுமதி வழங்கினாலும் ராஜஸ்தானில் தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

ராணி பத்மினியின் தியாகத்தை போற்றும் வகையிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுவதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுபோல் கோவா மாநிலத்திலும் ‘பத்மாவத்’ படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்று மாநில அரசுக்கு போலீஸ் சார்பில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து கோவா போலீசார் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கோவாவில் ‘பத்மாவத்’ படத்தை திரையிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. தற்போது கோவாவில் சுற்றுலா சீசன் தொடங்க இருக்கிறது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள் என்பதால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இந்த நேரத்தில் ‘பத்மாவத்’ படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது கடினம். எனவே பத்மாவத் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரிடம் கேட்டபோது, ‘பத்மாவத்’ படத்துக்கு தடை விதிப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

இதற்கிடையே பத்மாவத் படத்தில் 300 காட்சிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலை சென்சார் போர்டு தலைவர் பராசூன் ஜோஷி மறுத்துள்ளார். அது முற்றிலும் தவறான தகவல் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான காட்சிகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com