மகன் கல்யாணத்தில் உறுப்பு தான விழிப்புணர்வுக்கு தனி ஸ்டால்: பீகார் துணை முதல் மந்திரி அசத்தல்

பீகார் மாநிலத்தின் துணை முதல் மந்திரியான சுஷில் குமார் மோடி, தனது மகனது கல்யாணத்தில் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனி ஸ்டால் அமைத்து அசத்தியுள்ளார்.
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தின் துணை முதல் மந்திரியான சுஷில் குமார் மோடி, தனது மகனது கல்யாணத்தில் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனி ஸ்டால் அமைத்து அசத்தியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரான நிதிஷ் குமாரும், துணை முதல் மந்திரியாக பாஜகவை சேர்ந்த சுஷில் குமார் மோடியும் பதவி வகித்து வருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விபத்து மற்றும் எதிர்பாரா விதமாக இறப்பவர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளித்து வருகின்றனர். ஆனாலும், உறுப்பு தானம் வேண்டுபவர்கள் காத்துக் கிடக்கும் நிலையே இப்போது நிலவி வருகிறது.

இந்நிலையில், பீகார் மாநில துணை முதல் மந்திரியான சுஷில் குமார் மோடி, உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்வதென முடிவெடுத்தார். இதற்காக தனது மகனது கல்யாணத்தை பயன்படுத்துவது என முடிவு செய்தார்.

சுஷில் குமார் மோடியின் மகன் உத்கார். இவரது கல்யாணம் நாளை மறுதினம் (3.12.17) பீகார் கால்நடை மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த கல்யாணத்தில் கண்கள் மற்றும் உடல் உறுப்பு தானத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் தனி ஸ்டால் அமைத்துள்ளார். அந்த ஸ்டாலில், உறுப்பு தானம் தொடர்பான பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படும்.

மேலும், கல்யாணத்துக்காக வரதட்சணை வாங்க மாட்டேன் என உறுதி ஏற்பவர்கள் மற்றும் குழந்தைகள் திருமணங்களில் பங்கெடுப்பது இல்லை போன்ற காரணங்களுக்காகவும் தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளது என சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் துணை முதல் மந்திரியின் இந்த முயற்சிக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com