சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

5 ரூபாய்க்கு டிக்கெட் கொடுக்காததால் ஆத்திரத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
Published on

சென்னை:

சென்னை அரும்பாக்கம் எஸ்.பி.ஐ. காலனியைச் சேர்ந்தவர் கல்யாண்குமார் (வயது 55). கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலையில் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு டிக்கெட் கவுண்ட்டரில் 5 ரூபாயை கொடுத்து கோயம்பேடு செல்ல டிக்கெட் கேட்டார்.

ஊழியர்கள் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் என்றதற்கு, என்னிடம் 5 ரூபாய் தான் இருக்கிறது. இதற்கு டிக்கெட் கொடுக்காவிட்டால் இந்த ரெயில் நிலையத்தையே குண்டு வைத்து தகர்ப்பேன் என்று அவர் ஆவேசமாக பேசினார். லுங்கி கட்டியவன் என்பதால் டிக்கெட் கொடுக்க மறுக்கிறீர்களா? என்றும் சண்டை போட்டார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

கோபத்தில் வெளியே வந்த கல்யாண்குமார் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசி அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் குண்டு வெடிக்கப்போகிறது என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். உடனடியாக இதுபற்றி சூளைமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் சூளைமேடு போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.

சம்பந்தப்பட்ட டிக்கெட் கவுண்ட்டர் ஊழியரிடமும் நடந்தது பற்றி விசாரித்தனர். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் கல்யாண்குமார் ஊழியர்களுடன் ஆவேசமாக பேசும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் தான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள்.

சூளைமேடு போலீசார் அதேபகுதியில் சுற்றிக்கொண்டிருந்த கல்யாண்குமாரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ‘5 ரூபாய்க்கு டிக்கெட் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து இதுபோல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் குண்டு வெடிக்கப்போவதாக பேசிவிட்டேன்’ என்று கல்யாண்குமார் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் மனநோயால் பாதிக்கப்பட்டவரா? என்று அறிவதற்காக கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

5 ரூபாய் டிக்கெட் பிரச்சினையில் வெடிகுண்டு புரளியை கிளப்பிட்டு கல்யாண்குமார் சென்னை போலீசுக்கு பெரும் கலக்கத்தை உண்டாக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com