

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் நாட்ராயன்(வயது48). விவசாயியான இவர் தனது உறவினர் கலைச் செல்வியுடன் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.3.72 லட்சம் எடுத்துக்கொண்டு தாராபுரம் சாலையில் உள்ள இரும்பு கடைக்கு சென்றனர். அங்கு கொடுக்க வேண்டிய பணம் ரூ.1.22 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதி ரூ.2.50 லட்சத்தை மோட்டர் சைக்கிளில் வைத்திருந்தனர்.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பைக்கில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கடையில் இருந்து திரும்பி வந்த நாட்ராயன் பணத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம்பக்கம் விசாரித்தும் பணம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே ஒட்டன்சத்திரம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.