நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய காரணம்

தேனி பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய காரணம் குறித்து விஞ்ஞானி ஸ்டீபன் ராஜ்குமார் விளக்கமாக கூறினார்.
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய காரணம்
Published on

தேனி:

தேனி பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய காரணம் குறித்து விஞ்ஞானி ஸ்டீபன் ராஜ்குமார் கூறியதாவது:-

நியூட்ரினோ திட்டம் எதிர்காலத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமான ஆக்கப்பூர்வமான திட்டம். நியூட்ரினோ துகள்கள் சூரியனில் இருந்து நமக்கு நேரடியாக கிடைக்கிறது. பூமியின் மேலே இருந்து வரக்கூடிய காஸ்மிக் கதிர்கள் சுற்றுச்சூழலோடு வினைபுரியும் போது நியூட்ரினோ துகள்கள் உற்பத்தியாகிறது.

நமது உடலில் உள்ள பொட்டாசியமும் நியூட்ரினோ துகளை உருவாக்குகிறது. உலகத்துக்கு வெளிச்சம் தரும் ஒளித் துகள்களுக்கு அடுத்து அதிகமாக பரவி கிடப்பது நியூட்ரினோ துகள்கள். எதனுடனும் எளிதாக வினை புரியாது. ஒவ்வொரு வினாடியும் பல ஆயரம் கோடிகளுக்கு மேற்பட்ட நியூட்ரினோக்கள் நம் உடலை ஊடுருவி செல்கின்றன. இந்த நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதற்குதான் பொட்டிபுரம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்ய மற்ற கதிர்களை மறைத்து நியூட்ரினோ மட்டும் அனுப்பக்கூடிய வடிகட்டி தேவை. இந்த வடிகட்டும் தன்மை இயற்கையாகவே கடினமான பாறைகளுக்கு உண்டு.

இநத பாறைக்கு அடியில் உணர் கருவியை வைத்து நியூட்ரினோ துகள்களை வடிகட்டலாம். இதற்கு சரியான இடம் இந்தியாவில் இமயமலையும் அதற்கு அடுத்தாற்போல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொட்டிபுரம் உள்ளது.

எனவேதான் இங்கு ஆய்வு மையம் அமைய உள்ளது. இந்த மலையில் ஆய்வு மையம் அமைக்க ஏற்ற வகையில் அதன் பரப்பு எல்லா திசையிலும் 1 கி.மீ இருக்கிறது. எனவே நியூட்ரினோ துகளை வடிகட்டி அனுப்ப சரியான இடம் என பொட்டிபுரத்தை தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள வடபழஞ்சி கிராமத்தில் உயர் ஆற்றல் இயற்பியல் ஆய்வு மையம் உள்ளது. இங்கு தேனியில் அமையக்கூடிய நியூட்ரினோவை போன்ற ஒரு மாதிரி நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூடம் அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏப்ரல் 2-வது வாரத்தில் பணிகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதிரி நியூட்ரினோ அறிவியல் ஆய்வு மையத்தை அனைவரும் பார்வையிடலாம். இதில் 50 ஆயிரம் டன் இரும்புக்கு பதில் 85 டன் இரும்பைக் கொண்டு மாதிரி உணர் கருவி அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தில் மலை இல்லாததால் நியூட்ரினோ துகள் கிடைக்காது. ஆனால் நியூட்ரினோவின் மாதிரி செயல்பாட்டை எளிமையாக புரிந்து கொள்ளலாம். இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சாமானிய மக்களின் அச்சம் விலகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com