

சென்னை:
தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில்தான் அதிக அளவு மழை கிடைக்கும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 147 சதவீதம் வரை பெய்ததால் தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் கடலுக்குள் சென்றது.
அதன்பிறகு அக்டோபர் 16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கம்போல மழை பெய்தாலும் ஒட்டு மொத்த தமிழகத்தை கணக்கிடும்போது இயல்பைவிட 3 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. ஆனால் சென்னையில் 17 சதவீதம் மழை குறைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிகிறது. ஆனால் கடல்காற்று ஜனவரி முதல் வாரம் வரை நீடித்தாலும், மழையை கணக்கிடும்போது, 31-ந்தேதிவரைதான் கணக்கிடுவோம். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 3 நாட்கள்தான் உள்ளது.
ஜனவரி 10-ந்தேதி முதல் மழை பெய்தால் குளிர்கால மழையாக கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
வடகிழக்கு பருவமழையால் அதிக சேதாரம் ஏற்படவில்லை. வட மாவட்டங்களைவிட தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. இதேபோல் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாய உற்பத்தி விளைச்சல் அதிகமாகும்.
சென்னையில் தான் 17 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நீர் நிலைகளில் அதிகமாகவே தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.