வலுவான நிலையில் வடகிழக்கு பருவமழை- மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள கடற்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்
வானிலை நிலவரம்
Published on

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் அளித்த பேட்டி வருமாறு:-

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வலுவான நிலையில் உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள கடற்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 14 செமீ மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போட் கிளப் பகுதியில் தலா 13 செமீ, கடலாடியில் 12 செமீ, பரமக்குடி, கொடைக்கானலில் தலா 10 செமீ மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com