என்.எல்.சி. முதல் அனல் மின் நிலையம் இன்று முதல் மூடல்

நெய்வேலி என்.எல்.சி முதலாவது அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்பட்டது.
நெய்வேலி அனல் மின் நிலையம்
நெய்வேலி அனல் மின் நிலையம்
Published on

மந்தாரக்குப்பம்:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி எடுக்க 1959-ம் ஆண்டு சுரங்கம் தோண்டப்பட்டது.

அதன் பின்னர் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் பேரில் நெய்வேலியில் 1962-ம் ஆண்டு முதல் அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டது.

இதில் இருந்து 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த அனல் மின் நிலையம் ஜெர்மன் மற்றும் ரஷ்யா தொழில் நுட்பங்களுடன் கூடிய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த அனல் மின் நிலையத்துக்கு 25 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அதன் தரத்திற்கேற்ப ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

இந்த அனல் மின் நிலையம் ஒரு சில முறை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. உலக அளவில் ஒரு அனல் மின் நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்க கூடாது என வரையறை செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மத்திய பசுமை தீர்ப்பாயம் ஆயுட்காலம் முடிந்த நிலையில் உள்ள நெய்வேலி முதலாவது என்.எல்.சி அனல் மின் நிலையத்தை மூடுவதற்கு உத்தரவிட்டது. அதன் பேரில் நெய்வேலி என்.எல்.சி முதலாவது அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்பட்டது.

இந்த அனல் மின் நிலையத்தை மூடுவதால் ஏற்படும் மின் உற்பத்தி இழப்பை ஈடு செய்யும் வகையில் தற்போது புதிய அனல் மின் நிலையம் செயல்பட தொடங்கி உள்ளது. அந்த மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 500 மெகாவாட் மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதலாவது அனல்மின் நிலையம் மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்ற அனல் மின் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com