நிர்மலாதேவி விவகாரம்: முன்னாள் பதிவாளர் விஜயனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

நிர்மலாதேவி விவகாரத்தில் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் விஜயனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். #nirmaladevi
நிர்மலாதேவி விவகாரம்: முன்னாள் பதிவாளர் விஜயனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
Published on

மதுரை:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதானார் பேராசிரியர் நிர்மலா தேவி. அருப்புக்கோட்டை போலீசார் இவரை கைது செய்தாலும் காவலில் எடுத்து விசாரித்தது சி.பி.சி.ஐ.டி. இதனால் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.

5 நாள் காவலில் எடுத்து விசாரித்தபோதும் நிர்மலா தேவி தெரிவித்தது 2 பெயர்கள்தான். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளிடம் பேசியதாக தெரிவித்தார்.

இந்த விசயத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டு என்றும், அவர் கூறினார்.

நிர்மலாதேவி கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இருவரையும் காவலில் எடுத்து நடத்திய விசாரணையிலும் உருப்படியான எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இவர்களது காவல் இன்றோடு முடிவடைகிறது. நாளை இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இருப்பினும் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் கிடைக்காததால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறலில் உள்ளனர். நேற்று திருச்சுழி அருகே நாடாகுளத்தில் உள்ள கருப்பசாமியின் சொந்த வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.

அதன்பின்னர் அவர் வசித்த திருச்சுழியில் உள்ள வாடகை வீட்டிலும் சோதனை நடந்தது. ஏற்கனவே பேராசிரியர் முருகன், பேராசிரியர் நிர்மலா தேவி ஆகியோர் வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனைகளின் மூலம் வழக்கின் ஆதாராங்கள் ஏதாவது சிக்குமா? என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடக்கிறது. நிர்மலாதேவி வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர், பென்டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் மூலம் இதுவரை பல்கலைக்கழக பேராசிரியர்கள், தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள், நிர்மலா தேவியின் கணவரின் நண்பர் என பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தப்பட்டது.

அந்த வரிசையில் நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சி மைய பேராசிரியை விஜயாவிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் விஜயன் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணைகள் ஓரளவு முடிந்துவிட்டதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் வழக்கு முடிவுக்கு வரும் என்றும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் கவர்னரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானமும் தனது இரண்டு கட்ட விசாரணையை முடித்து விட்டார். நாளை (30-ந்தேதி) அறிக்கை தாக்கல் செய்வார் என எதிர்பார்த்த நிலையில், அவர் மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்க உள்ளதாக நேற்று தெரிவித்தார்.

மதுரை சுற்றுலா மாளிகையில் உள்ள அறையில் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவரை, பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், நிர்மலாதேவி விவகாரத்தில் எனது கணவருக்கு எந்த தொடர்பும் இல்லை. உயர் அதிகாரிகள் அவரை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர்.

கருப்பசாமிதான் நிர்மலாதேவியை எனது கணவருக்கு அறிமுகம் செய்துள்ளார். அதுவும் நிர்மலா தேவி புத்தாக்க பயிற்சிக்கு பல்கலைக்கழகம் வந்தபோது அறை ஒதுக்கித்தர கேட்டு சந்தித்துள்ளார்.

ஆனால் எனது கணவர் ஒதுக்கித்தந்த அறையில் தண்ணீர் வசதி இல்லை என நிர்மலாதேவி அங்கு தங்கவில்லை. அவருக்கு ஏசி அறை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அதனை ஒதுக்கி கொடுத்தது யார்? நிர்மலாதேவி பல்கலைக் கழக விழாவில் கவர்னருடன் படம் எடுக்க அனுமதித்தது யார்? என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட்டால், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்றார்.அவரது இந்த கேள்விக்கு பதில் கிடைத்தால் வழக்கின் உண்மை நிலை வெளிவரும் என பலரும் கூறுகின்றனர். #tamilnews #nirmaladevi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com